பெங்களூரு விமான நிலையத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது - 2 பேர் கைது


பெங்களூரு விமான நிலையத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது - 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2022 2:17 AM IST (Updated: 20 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து பார்சல்கள் மூலம் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த போதைப்பொருட்கள் சிக்கின.

பெங்களூரு, 

பெங்களூருவில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் டார்க்வெப் என்ற இணையதளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பார்சல்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள சரக்கு பெட்டகத்தில் உள்ள பார்சல்களில் போதைப்பொருட்கள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சரக்கு பெட்டகத்தில் இருந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது பெல்ஜியம், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்பியா என்ற இடத்தில் இருந்து வந்த 2 பார்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

இதனால் அந்த 2 பார்சல்களையும் அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அந்த பார்சல்களில் போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர் அந்த 2 பார்சல்களில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.2.82 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர்.

மேலும் இதுதொடர்பாக 2 பேரை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். ஆனால் அவர்களின் பெயர், விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.9.82 கோடி போதைப்பொருட்கள் சிக்கி இருப்பது பெங்களூரு விமான நிலையத்தில் இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story