‘தாமரை’யில் அமர்ந்துதான் வீட்டுக்கு வருவாள், லட்சுமி: ராஜ்நாத்சிங்


‘தாமரை’யில் அமர்ந்துதான் வீட்டுக்கு வருவாள், லட்சுமி: ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 21 Feb 2022 2:58 AM IST (Updated: 21 Feb 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

தாமரையில் அமர்ந்துதான் லட்சுமி வீட்டுக்கு வருவாள், சைக்கிளிலோ, யானையிலோ அவள் செல்வது இல்லை என்று கட்சி சின்னங்களை ஒப்பிட்டு ராஜ்நாத்சிங் பேசினார்.

தாமரை

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று அமேதி அருகே உள்ள ஜகதிஷ்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஏழைகள் மற்றும் பலவீனமானவர்களின் உண்மையான நலம் விரும்பி பா.ஜனதாதான். லட்சுமி தேவி, சைக்கிளில் (சமாஜ்வாடி சின்னம்) அமர்ந்தோ, யானை (பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்) மீது அமர்ந்தோ அல்லது யாருடைய கை (காங்கிரஸ் சின்னம்) மீது அமர்ந்தோ யாருடைய வீட்டுக்கும் செல்வது இல்லை.

தாமரை (பா.ஜனதா சின்னம்) மீது அமர்ந்துதான் லட்சுமி தேவி நமது வீட்டுக்கு வருவாள்.

பா.ஜனதா நல்லாட்சி

பிரதமர்-விவசாயிகள் நிதி உதவி, உஜ்வாலா திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஆகியவை லட்சுமி தேவி வருவதற்கான அடையாளங்கள்.

பா.ஜனதா மட்டுமே இந்தியாவில் நல்லாட்சி நடத்தி வருவதாக சர்வதேச அமைப்புகள் கூட பாராட்டுகின்றன. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா நிறைவேற்றி விட்டது.

ஆயுத தயாரிப்பு

முந்தைய அரசுகள் தங்கள் வாக்குறுதிகளை நேர்மையாக நிறைவேற்றி இருந்தால், நாடு பின்தங்கி இருக்காது. அவர்கள் மக்களின் நம்பிக்கையை மீறி விட்டனர். ஆனால், நாங்கள் மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவோம். நாடு இன்று வேகமாக முன்னேறி வருகிறது.

ரஷியாவின் ஒத்துழைப்புடன் ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளும், ஏவுகணைகளும் இப்போது அமேதியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நமது ராணுவத்துக்கான ஆயுதங்கள், நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story