“இந்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது” - உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் பேட்டி..!


“இந்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது” - உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் பேட்டி..!
x
தினத்தந்தி 26 Feb 2022 11:04 PM IST (Updated: 26 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது என்று உக்ரைனில் இருந்து மும்பை வந்த மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை, 

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு சார்பில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. 

இதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் மாற்றுவழி குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டி இருந்தது. 

இந்தச் சூழலில் உக்ரைனில் இருந்து ருமானியா சென்ற 250 இந்தியர்களுடன் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கியது. 

இதனையடுத்து உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “இந்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் பயந்து இருந்தோம். ஆனால் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி, நாங்கள் பாதுகாப்பாக வந்துள்ளோம். அரசாங்கம் ஓரிரு நாட்களில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. நம் நாட்டையும் இந்திய அரசையும் நினைத்து பெருமை கொள்கிறோம். எஞ்சியுள்ள மாணவர்களும் விரைவில் அழைத்து வரப்படுவார்கள் என நம்புகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து 250 இந்தியர்களுடன் 2வது விமானம் டெல்லி புறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Next Story