உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்த 2வது விமானம்..!
போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
புதுடெல்லி,
நேட்டோவில் சேரத்துடிக்கும் உக்ரைனை மட்டுப்படுத்த அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷியா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால், பிற நாடுகளுக்கும் மறைமுகமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கடந்த 24-ந்தேதி மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அங்கு போர் மேகம் சூழ்ந்ததும் கடந்த 22-ந்தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் 240 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். ஆனால் கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியதுமே, உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
இதனால் அங்கு சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது. இது அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உக்ரைனில் வசித்து வரும் இந்திய மாணவர்கள் தங்களை மீட்கக்கோரி வெளியிட்டு வரும் வீடியோ பதிவுகளும், இங்கிருக்கும் அவர்களது பெற்றோரின் கண்ணீர் காட்சிகளுமாக சமூக வலைத்தளம் நிரம்பி வழிகின்றன.
அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்காக ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு சென்ற விமானங்களில் முதல் விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டது. இந்த விமானம் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் வரவேற்றார். மேலும் அங்குள்ள நிலவரங்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது, விமானத்தில் வந்திருந்த மாணவர்கள், ‘ஜெய்ஹிந்த்’ என கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பின்னர் விமானத்தில் வந்திருந்த பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்ப்டடது. மேலும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது தொற்று பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. இதற்காக விமான நிலையத்திலேயே தனி இடம் ஒதுக்கி அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலும் மாணவ-மாணவிகளே வந்திருந்தனர்.
இதைப்போல புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு நேற்று மேலும் 2 விமானங்கள் சென்றுள்ளன. அவை உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அதில் பயணம் மேற்கொண்டவர்களை மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக உக்ரைனில் இருந்து புகாரெஸ்ட் வழியாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தியர்களுடன் மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்துரையாடினார். அப்போது அவர், “பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொடர்பில் இருக்கிறார், அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதிசெய்ய பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று சிந்தியா கூறினார்.
The second evacuation flight from Romanian capital Bucharest carrying 250 Indian nationals who were stranded in Ukraine landed at the Delhi airport in the early hours of Sunday. #OperationGangapic.twitter.com/vjKHRqsYF7
— ANI (@ANI) February 26, 2022
Related Tags :
Next Story