கல்வியை தொடர முடியாத குழந்தைகளுக்காக 200 டிவி சேனல்கள் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


கல்வியை தொடர முடியாத குழந்தைகளுக்காக 200 டிவி சேனல்கள் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 28 Feb 2022 3:51 PM IST (Updated: 28 Feb 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படுகின்றன என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை,

தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்றது. நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றே அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 60 ஆண்டுகளாக , சோசலிச திட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி நடந்து கொண்டிருந்தது. ஆனால் அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன.

கொரோனா தொற்றால் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படுகின்றன.

கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக கொடுக்கப்படுகிறது என கூறினார்.

Next Story