ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத்தடை இந்தியாவை பாதிக்காது - விமானப்படை தளபதி சந்தீப் சிங்


ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத்தடை இந்தியாவை பாதிக்காது - விமானப்படை தளபதி சந்தீப் சிங்
x
தினத்தந்தி 2 March 2022 9:23 AM GMT (Updated: 2 March 2022 9:23 AM GMT)

ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத்தடை இந்தியாவை பாதிக்காது என்று விமானப்படை தளபதி சந்தீப் சிங் கூறினார்.

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.  மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைந்தன.

இந்த நிலையில்,  இந்தியர்களை மீட்டெடுக்கும் பணியில் விமானப் படை விமானங்கள் இணைந்தது குறித்து இந்திய விமானப்படை தளபதி சந்தீப் சிங் கூறியதாவது:-

இந்தியர்களை வெளியேற்றுவதற்காக மூன்று இந்திய விமானப் படை விமானங்கள் காலை முதல் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்டெடுக்கும் பணி 24 மணி நேரமும் நடைபெறும். நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளியுறத்துறையுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை நடந்து வருகிறது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமானப் படை ஒரே நாளில் நான்கு விமானங்களை அனுப்ப முடியும். ஒரு சுற்றில் 200 பேர் அழைத்து வரப்படுவார்கள். நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத்தடை இந்தியாவை பாதிக்காது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா உடனான உறவு நெருக்கமாகவும், வலிமையாகவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story