உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை


உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை
x
தினத்தந்தி 4 March 2022 7:06 AM GMT (Updated: 4 March 2022 7:45 AM GMT)

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


புதுடெல்லி,

உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. 
அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. 

முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண்டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர்.

 ரஷியாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் நெருப்பு குழம்புகளும் புகையுமாக காணப்படுகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.

இந்தநிலையில்,   உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய மந்திரி பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின்போது பிரதமர்  மோடி உக்ரேனில் இருந்து இதுவரை எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அங்கு சிக்கி இந்தியர்களை மீட்க அரசு சார்பில் என்ன என்ன  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோன்று உக்ரைன் - ரஷியா இடையே தொடர்ச்சியாக போர் நீடித்துவரும் நிலையில் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஐந்து முறைக்கு மேலாக உயர்மட்ட ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story