துப்பாக்கி சூட்டில் காயம்; மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்: மத்திய வெளிவிவகார அமைச்சகம் தகவல்


துப்பாக்கி சூட்டில் காயம்; மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்:  மத்திய வெளிவிவகார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 4 March 2022 7:23 PM IST (Updated: 4 March 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.




புதுடெல்லி,


உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  அந்த வகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.  நேற்றுவரை 30 விமானங்களில் 6,400 இந்தியர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில் உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்தியர் ஹர்ஜோத் சிங் என்பவரால் சோதனை சாவடி பகுதியருகே துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார்.  அதில் பலத்த காயமடைந்த அவர், கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணவரின் மருத்துவ நிலையை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.  அவரது உடல்நலன் பற்றிய சமீபத்திய நிலவரம் பற்றி அறிவதற்கான முயற்சியிலும் நம்முடைய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.  எனினும், தகவலை அறிய முற்படுவதற்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.  ஏனெனில் அது போர் நடந்து வரும் பகுதியாக உள்ளது என கூறியுள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் மீட்பு பணியானது கடினம் நிறைந்து உள்ளது.  உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளையும், குறைந்தது உள்ளூர் போர்நிறுத்த ஒப்பந்தமேனும் செய்து கொள்ள முன்வர வலியுறுத்தி உள்ளோம்.  இதனால், நம்முடைய குடிமக்கள், மாணவர்களை வெளியேற்ற முடியும் என தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் அதிகாரிகளிடம் சிறப்பு ரெயில்களுக்கான கோரிக்கையை முன்வைத்து உள்ளோம்.  ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை.  அதேவேளையில், பேருந்துகளை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story