மத்திய மந்திரி ரானேயிடம் மும்பை போலீசார் 9 மணி நேரம் விசாரணை


மத்திய மந்திரி ரானேயிடம் மும்பை போலீசார் 9 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2022 2:44 AM IST (Updated: 6 March 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

பெண் மரணம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானேயிடம் போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன். இவர் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவதூறு புகார்

திஷா சாலியன் உயிரிழந்த 6 நாளில் சுஷாந்த்சிங் பாந்திரா வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து 2 பேரின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. எனினும் போலீசார் விசாரணையில் 2 பேரின் மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்போது மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மந்திரியுமான நாராயண் ரானே, திஷா சாலியன் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அப்போது அவருடன் மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ.வும் இருந்தார். இந்தநிலையில் தனது மகள் மரணம் குறித்து அவதூறு பரப்புவதாக திஷா சாலியனின் பெற்றோர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு

இந்தபுகாரை அடுத்து மும்பை மால்வாணி போலீசார் திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக மத்திய மந்திரி நாராயண் ரானே, நிதேஷ் ரானே மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 நாளில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். எனினும் மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதை காரணம் காட்டி அவர்கள் உடனடியாக விசாரணைக்கு வரவில்லை.

மேலும் கோர்ட்டில் முறையிட்டு கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை வாங்கினர்.

விசாரணைக்கு ஆஜர்

இந்தநிலையில் நேற்று மத்திய நாராயண் ரானே, நிதேஷ் ரானே ஆகியோர் விசாரணைக்காக மால்வாணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்கள் மதியம் 1.45 மணியளவில் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

இந்தநிலையில் காரில் வந்து இறங்கிய நாராயண் ரானே, நிதேஷ் ரானே 2 பேரையும் கூட்ட நெரிசலில் சிக்காதபடி போலீசார் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.

9 மணி நேரம் விசாரணை

சுமார் 2 மணியளவில் அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் எந்த அடிப்படையில் திஷா சாலியன் மரணம் குறித்து தகவல்களை கூறினீர்கள், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இரவு 11 மணி வரை அவரை போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மத்திய மந்திரி ஒருவரை பெண் மரணத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் போலீசார் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாருடன் தொண்டர்கள் மோதல்

முன்னதாக நாராயண் ரானே போலீஸ் நிலையத்தில் ஆஜரானதை தொடர்ந்து அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு இருந்தனர். நாராயண் ரானே நீண்ட நேரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால், தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதனால் தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் நிலைய பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story