காஷ்மீரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரவ வெடிகுண்டு புழக்கம்..!
காஷ்மீரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரவ வெடிகுண்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் ஜம்மு பகுதியில் சர்வதேச எல்லை அருகே கடந்த 24-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த டிரோன்கள், ஆயுத குவியலை போட்டு விட்டு சென்றன. போலீசார் அவற்றை ஆய்வு செய்தபோது, வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் ஆகியவை இருந்தன.
அவற்றுடன் தலா 1 லிட்டர் கொண்ட 3 பாட்டில்களில் வெள்ளை நிற திரவம் இருந்தது. போலீசார் அந்த திரவத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட ஆய்வில், அது டைனமைட்டில் பயன்படுத்தப்படும் டி.என்.டி. அல்லது நைட்ரோகிளிசரினாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னும் இறுதி அறிக்கை வெளியாகவில்லை.
இந்த திரவம், திரவ வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு, தெற்கு காஷ்மீரில் திரவ வெடிகுண்டை பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். அதன்பிறகு இல்லாமல் இருந்த திரவ வெடிகுண்டு மீண்டும் பயங்கரவாதிகளின் புழக்கத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
திரவ வெடிகுண்டை மெட்டல் டிடெக்டராலோ, மோப்ப நாயாலோ கண்டுபிடிக்க முடியாது. எனவே, இது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் நாசவேலை நடத்த பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ, இந்த ஆயுத குவியலை டிரோன்கள் மூலம் அனுப்பி வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Related Tags :
Next Story