ஜி.எஸ்.டி வரியை உயர்த்த முடிவு! குறைந்தபட்ச வரி விகிதம் 5-லிருந்து 8% -ஆக அதிகரிக்கலாம்...?


ஜி.எஸ்.டி வரியை உயர்த்த முடிவு! குறைந்தபட்ச வரி விகிதம் 5-லிருந்து 8% -ஆக அதிகரிக்கலாம்...?
x
தினத்தந்தி 7 March 2022 11:29 AM IST (Updated: 7 March 2022 11:49 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஜி எஸ் டி தொகுப்பாக, 8%, 18% மற்றும் 28 சதவீத விகிதங்களுடன் கூடிய, 3-அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பையும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

இப்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச 5 சதவீத ஜி எஸ் டி வரி விகதத்தை, 8 சதவீதமாக உயர்த்த வரும் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.

முன்னதாக, கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில மந்திரிகளுடன் கூடிய ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜி எஸ் டி வரி விகிதங்களை பிரித்து தொகுப்பதன் மூலம், வருவாயை பெருக்குவதற்கான வழிகளை பரிந்துரை செய்வதற்காகவும், வரி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்வதற்காகவும் இந்த குழு உருவாக்கப்பட்டது.

அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு  பட்டியலில் உள்ள பல துறைகளுக்கான ஜி எஸ் டி வரிவிலக்கை நீக்கவும் முடிவெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது

தற்போது, ஜிஎஸ்டி என்பது 5%, 12%, 18% மற்றும் 28 சதவீத வரி விகிதத்தை கொண்டதாக நான்கு அடுக்கு வரிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

ஜிஎஸ்டி  பட்டியலில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது அல்லது குறைந்த சதவீத(5%) வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்ச வரி(28) விதிக்கபடுகிறது.

கணக்கீடுகளின்படி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய மிகக் குறைந்த வரி விகித தொகுப்பில் இருக்கும் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை கூடுதலாக 1 சதவீதம் அதிகரிப்பு செய்தால், ஆண்டுக்கு ரூ.50,000 கோடி அதிகமாக வருவாய் ஈட்ட முடியும்.

மேலும், புதிய ஜி எஸ் டி தொகுப்பாக, 8%, 18% மற்றும் 28 சதவீத விகிதங்களுடன் கூடிய, 3-அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பையும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் நிறைவேறினால், தற்போது 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள அனைத்து சரக்கு மற்றும் சேவைகளும் 18 சதவீத அடுக்குக்கு மாறும்.

ஜூலை 1, 2017 அன்று, நாட்டில் முதன்முதலாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில், ஜூன் 2022 வரையிலான 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, மத்திய அரசால் மாநிலங்களுக்கு  வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு முறை, வருகின்ற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பின்னர், ஜிஎஸ்டி வசூலில் உள்ள வருவாய் இடைவெளியைக் குறைக்க மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்திருக்க முடியாத சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜி எஸ் டி வரி உயர்த்தப்படும் முடிவு குறித்து ஜிஎஸ்டி வட்டாரம் தெரிவித்துள்ளதாவது, ‘மாநிலங்கள் ரூ.1 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன.இந்த நிலையில், ஜிஎஸ்டி வருவாயை நடுநிலையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைச் செய்வதற்கான ஒரே வழி, வரி விகித தொகுப்பை பகுத்து  வரிஏய்ப்பை தடுப்பதுதான்’ என்று ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story