மீண்டும் ஆட்சியமைக்க தேவைப்படுவோரின் உதவியை நாடுவோம்; கோவா முதல்-மந்திரி பரபரப்பு கருத்து!


மீண்டும் ஆட்சியமைக்க தேவைப்படுவோரின் உதவியை நாடுவோம்; கோவா முதல்-மந்திரி பரபரப்பு கருத்து!
x
தினத்தந்தி 8 March 2022 9:24 PM IST (Updated: 8 March 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

தேவைப்பட்டால் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை அழைத்து வந்து பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 ந்தேதி வரை சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

2017 கோவா தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜனதா கட்சி 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2022 சட்டமன்றத் தேர்தலலிற்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. 

அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 16 இடங்களை வெல்லும் . இழுபறி நிலைமை உருவாகலாம் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

இந்தநிலையில், தற்போது ஆளும்கட்சியாக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக சார்பில் கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் பொறுப்பில் உள்ளார். முன்னதாக அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், காலையில் பிரதமர் மோடியை கோவா முதல்-மந்திரி சந்தித்து பேசினார்.பின்னர் இன்று மாலை பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது,

“கருத்துக் கணிப்புகள் எதையும் காட்டலாம்; கோவாவில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. தேவைப்பட்டால் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை அழைத்து வருவோம். கோவாவில் மீண்டும் ஆட்சியமைக்க தேவைப்படுவோரின் உதவியை நாடுவோம்.

காங்கிரஸ் கட்சியின் மனதில் எப்போதும் பயம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த முறை தாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் ஓடிவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அதனால்தான் ரிசார்ட் அரசியலைத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை மறுதினம் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Next Story