நிலவின் புறவெளி மண்டலம் வரை ‘ஆர்கான் 40’ வாயு பரவி இருப்பது கண்டுபிடிப்பு - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-2 ஆய்வில் தற்போது ஆர்கான்-40 வாயுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2019 ஜூலை மாதம் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியான விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் தரை இறங்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் நிலவின் மேற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வாயுக்கள் குறித்த விரிவான ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நிலவின் எக்ஸோ அடுக்கு(Exosphere) என்று அழைக்கப்படும் புறவெளி மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ்-2 (CHASE-2) என்ற கருவி கண்டறிந்தது.
மேற்கொண்டு இது குறித்து தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வுகளில், இந்த ஆர்கான் 40 வாயு, நிலவின் புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதியில் ஆர்கான் 40 அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் அவை புறவெளி மண்டலத்தில் மட்டுமே இருப்பதாக கருதப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது சந்திரயான்-2 ஆய்வில் ஆர்கான்-40 வாயுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இது நிலவு தொடர்பான ஆய்வில் முக்கிய மைல்கல்லாகும். மேலும், இதன் தரவுகள் அடுத்தகட்ட ஆய்வுகள், நிலவின் பயணங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.
Related Tags :
Next Story