பிரதமர், உள்துறை மந்திரி என அனைவரும் பிரசாரம் செய்தும் பஞ்சாப்பில் பாஜக தோற்றது ஏன்? - சஞ்சய் ராவத் கேள்வி
பிரதமர், உள்துறை மந்திரி என அனைவரும் பிரசாரம் செய்தும் பஞ்சாப்பில் பாஜக தோற்றது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மீதி 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாப்பில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் அங்கு ஏன் பாஜக தோல்வியடைந்தது என்று கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
'4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் ஒரு பகுதி. உத்தரகாண்டில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தோற்றது ஏன்? கோவாவில் 2 துணை முதல் மந்திரிகள்தோற்றது ஏன்? எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, பஞ்சாப் மாநிலத்தில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாபில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் காங்கிரஸ், சிவசேனாவை விட குறைந்த வாக்குகளே பாஜக பெற்றுள்ளது. உத்தர பிரதேசம் அவர்களின் மாநிலமாக இருந்தபோதும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் இருந்து 111 இடங்கள் கைப்பற்றியிருக்கிறது.
மேலும் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மற்றும் ஒவைசி பங்களித்துள்ளனர், எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story