தூய்மை பணியாளர் பணியை தொடர விரும்பும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் தாய்..!


தூய்மை பணியாளர் பணியை தொடர விரும்பும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் தாய்..!
x
தினத்தந்தி 13 March 2022 4:01 PM GMT (Updated: 13 March 2022 4:01 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் தாய், தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார். 

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பகதவுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லப் சிங் உகோகே, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் போட்டியிட்ட அதே தொகுதியில் தான் முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்டார். அவரை 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் உகோகே.

லப் சிங் உகோகேயின் தாயார் பல்தேவ் கவுர், அரசுப் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். தனது மகன் பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன பிறகும், பல்தேவ் கவுர் வழக்கம் போல் தனது பணியைத் தொடர்ந்து வருகிறார். தனது வாழ்க்கையில் ‘ஜாடு’ (துடைப்பம்) முக்கிய அங்கம் வகிப்பதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தனது பணியை வழக்கம்போல் தொடரப்போவதாக தெரிவித்தார்.

மேலும் தனது மகன் வெற்றி பெற்றது குறித்து பல்தேவ் கவுர் கூறுகையில், “நாங்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைக்கிறோம். எனது மகனின் பதவியைப் பொருட்படுத்தாமல், பள்ளியில் எனது கடமையை நான் தொடர்ந்து செய்வேன். மாநில முதல்-மந்திரியை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எனது மகன் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தோம்” என்று அவர் கூறினார்.

லப் சிங் உகோக்கின் தந்தை தர்ஷன் சிங், கூலி வேலை செய்து வந்த அவர், மகன் எம்.எல்.ஏ ஆனாலும் குடும்பம் முன்பு போல் வாழ்வோம் என்றார். தனது மகன் குடும்பத்தை விட மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறினார்.

Next Story