மக்களவையில் பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு..!


மக்களவையில் பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு..!
x
தினத்தந்தி 14 March 2022 12:20 PM IST (Updated: 14 March 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகிற ஏப்ரல் 8-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்.பிக்கள் 'மோடி, மோடி' என்ற பெருமுழக்கத்தோடு மேசையை தட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு மோடியின் தலைமையே காரணம் எனக்கூறும் வகையில், பாஜக எம்.பிகள் இத்தகைய வரவேற்பை அளித்ததாக தெரிகிறது.

Next Story