ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு: பெங்களூருவில் நாளை முதல் பொதுஇடங்களில் போராட்டம் நடத்த தடை


ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு: பெங்களூருவில் நாளை முதல் பொதுஇடங்களில் போராட்டம் நடத்த தடை
x
தினத்தந்தி 14 March 2022 8:49 PM IST (Updated: 14 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பெங்களூருவில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பொது இடங்களில் போராட்டம், கொண்டாட்டம், கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. 

அதன் பிறகு  விசாரணை முடிந்து தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், கர்நாடகாவில் தற்போதே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 15) முதல்  மார்ச் 21 வரை ஒரு வாரத்திற்கு இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இந்த தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Next Story