ஹிஜாப் அணிந்தால் என்ன பிரச்சினை? - அசாதுதீன் ஓவைசி கேள்வி


ஹிஜாப் அணிந்தால் என்ன பிரச்சினை? - அசாதுதீன் ஓவைசி கேள்வி
x
தினத்தந்தி 15 March 2022 2:49 PM IST (Updated: 15 March 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிந்தால் என்ன பிரச்சினை என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு  விசாரணை முடிந்து தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத சட்டத்தில் அவசியமானது இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும். ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு அளித்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சியும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஹிஜாத் அணிய தடை விதித்து வழங்கிய தீர்ப்பு அடிப்படை உரிமைகளான மத, கலாச்சார, வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரானது. மேலும், அரசியலமைப்பு சட்டம் 15-க்கும் எதிரானதாகும். இந்த தீர்ப்பு இஸ்லாமிய மத பெண்களிடையே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்து. அவர்கள் குறிவைக்கப்படலாம். நவீனத்துவம் என்பது மத நடைமுறைகளைத் தவிர்ப்பது அல்ல. ஒருவர் ஹிஜாப் அணிந்தால் என்ன பிரச்சின்னை?’ என்றார்.

Next Story