இந்திய பிரதமர் மோடி - இலங்கை நிதி மந்திரி சந்திப்பு
இலங்கை நிதி மந்திரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது.
இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.
அந்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.280-க்கும், டீசல் லிட்டர் ரூ.170-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.5 லட்ச ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். அதிபர் மாளிகை முன் இன்று திரண்ட பொதுமக்கள் அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அந்நாட்டின் நிதி மந்திரி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அண்டை நாட்டினருக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையில் இலங்கை முதன்மையாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா எரிபொருள் மற்றும் பண உதவிகள் வழங்கியுள்ள நிலையில் இலங்கைக்கு மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story