மருத்துவ மேல்படிப்புகளில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


மருத்துவ மேல்படிப்புகளில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 17 March 2022 12:25 AM GMT (Updated: 17 March 2022 12:25 AM GMT)

மருத்துவ மேல்படிப்புகளில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சுப்ரீம் கோட்டில் வழக்கு

இதை எதிர்த்து காஞ்சீபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் ராஷ்மி நந்தகுமார் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார்.

அதில் ‘சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் நடப்பு ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.

மத்திய அரசு பதில்

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இதனிடையே, சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு நடப்பு ஆண்டும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து மத்திய அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:-

அனுமதி

அரசு டாக்டர்களுக்கு சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஒதுக்கி நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டிலும் சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஒதுக்க அனுமதிக்க கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

மேலும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த ரிட் மனுக்கள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்பு மகத்தானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும், கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம்” என சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள அனுமதி தி.மு.க. சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி.

மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை, 5 ஆண்டுகளுக்கு பின்பு இன்று தி.மு.க. ஆட்சியினால், சட்டப்போராட்டத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது. கிராமங்களிலுள்ள மக்களுக்கும் டாக்டர்கள் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அரசு டாக்டர்களுக்கு இப்படியொரு படிப்புரிமை வழங்கி 50 சதவீதம் இடங்களை கிராமப்புறங்களிலுள்ள அரசு டாக்டர்களுக்கு வழங்கவேண்டும் என்று முதன் முதலில் 1999-ல் அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

காவு கொடுத்தது

சமூகநீதியில் எப்போதுமே நாட்டிற்கு முன்னோடியாக விளங்கிய அவரது உத்தரவு 2016 வரை தமிழ்நாட்டில் தங்குதடையின்றி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கிராமங்கள்தோறும் அரசு டாக்டர்கள் பணியாற்றி, மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கி வந்தார்கள். ஆனால் திடீரென்று ‘நீட்' என்ற ஒரு கோடரி மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவ கனவை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி சிதைத்துக்கொண்டிருக்கிறதோ?, அதேபோல் இந்த கிராமப்புறத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்களின் 50 சதவீதம் இடஒதுக்கீட்டையும் காவு கொடுத்தது.

அதைக் கண்டும் காணாமல் இருந்தது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு. இந்நிலையில்தான் இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அருண் மிஷ்ரா தலைமையிலான அரசியல் சட்டஅமர்வு, “மாநிலத்திற்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு செய்துகொள்ளும் உரிமை மாநில அரசுக்கு உண்டு” என்று கடந்த 31.8.2020 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்து, அந்த அடிப்படையில் கிராமப்புற அரசு டாக்டர்களுக்கான இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்டு தீர்ப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காகவே சென்னை ஐகோர்ட்டு சில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆண்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டதன்பேரில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 2021-2022, அதனை செயல்படுத்த தடையாணை பிறப்பித்தது.

இந்த ஆண்டு இன்னொரு வழக்கில் ஐகோர்ட்டின் நீதிபதிகள் தண்டபாணி அரசாணையை செயல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து சென்ற மேல்முறையீட்டில்தான் இப்போது இந்த ஆண்டு கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து நீதிபதிகள் எல்.என்.நாகேஸ்வரராவ், கவாய் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மகத்தான தீர்ப்பு

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு மருத்துவ மாணவர்களின் சார்பில், “50 சதவீதம் இடஒதுக்கீட்டை தடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் மாநில பட்டியலில் இருக்கிறது. இந்த ஒதுக்கீடு கிராமப்புறங்களில் மருத்துவ சேவைக்கான திட்டம்” என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்ததை ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்றதும், மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ கல்வி இடங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இப்போது கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க, அந்த பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. சமூகநீதியை மதிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு பதிலாக சமூகநீதியை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு மகத்தானது. இதேபோல் “கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை” பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். அதற்காக தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story