“கட்சி மாற்றத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார்” - சத்ருகன் சின்ஹா பேட்டி
சத்ருகன் சின்ஹா தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து பேட்டியளித்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் காலியாக உள்ள அசன்சால் பாராளுமன்ற தொகுதி மற்றும் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 17-ந் தேதி(இன்று) தொடங்கி 24-ந் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், அசன்சால் நாடாளுமன்ற தொகுதிக்கு சத்ருகன் சின்ஹாவும், பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு சுப்ரியா சுலேவும் வேட்பாளர்களாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சத்ருகன் சின்ஹா, 20 வருடங்களுக்கு முன்பு வாஜ்பாய் ஆட்சியின போது பாஜக மந்திரியாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தனது கட்சி மாற்றத்தில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்ததார் என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது;-
“மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைவது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம் மற்றும் வாய்ப்பு. நான் திரிணாமுல் கட்சியில் இருக்க வேண்டும் என்றும், அசன்சால் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார். எனது இந்த கட்சி மாற்றத்தில், என் மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசுவதற்கான சரியான நேரம் இது இல்லை என்றும், அசான்சால் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தனது முழு கவனமும் இருப்பதாகவும் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story