ஹோலி பண்டிகை; விலங்குகளுக்கு தீங்கு செய்யும் வண்ணங்களை பூச பெங்களூருவில் தடை


ஹோலி பண்டிகை; விலங்குகளுக்கு தீங்கு செய்யும் வண்ணங்களை பூச பெங்களூருவில் தடை
x
தினத்தந்தி 18 March 2022 10:24 AM IST (Updated: 18 March 2022 10:24 AM IST)
t-max-icont-min-icon

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் விலங்குகளுக்கு தீங்கு செய்யும் வண்ணங்களை அவற்றின் மீது பூச பெங்களூருவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.



பெங்களூரு,


நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  வண்ணங்களின் திருவிழாவாகவும், மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் திருவிழாவாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போதிலும், பிற மத நம்பிக்கை சார்ந்தவர்களும் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.  நாட்டில் வசந்தகால அறுவடையின் தொடக்கத்தினை குறிக்கும் வகையில் ஹோலியை மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆடவர், மகளிர், சிறுவர் சிறுமியர், முதியவர்கள் என ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், பூசியும் கொண்டாடுவது வழக்கம்.  இனிப்புகளை உண்டும், வண்ண பொடிகளை தூவி, நீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டும் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.  விலங்குகள் மீது வண்ண பொடிகளை தூவியும் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுண்டு.  இதுபற்றி கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை துறையின் துணை இயக்குனர் வெளியிட்டு உள்ள செய்தியில், ரசாயன அல்லது இயற்கை வண்ண பொடிகள் விலங்குகளின் தோல், வாய், கண் அல்லது மூக்கு வழியாக அவற்றின் உடலுக்குள் செல்ல முடியும்.

இதனால், ஒவ்வாமை, வாந்தி மற்றும் பார்வை இழப்பு ஆகியவையும் ஏற்பட கூடும்.  விலங்குகளின் சுகாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற வண்ணங்களை பூசாமல் தடுக்கும்படி பொதுமக்களிடம் நான் கேட்டு கொள்கிறேன்.  தவிர, விலங்குகள் கொடுமை சட்டம், 1960ன்படி இது சட்டவிரோதம் ஆகும்.

விலங்குகளின் மீது வண்ண பொடிகளை பூசுவது, தூவுவது போன்ற சம்பவங்கள் நடப்பது அறியப்பட்டால், இந்த சட்டத்தின் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story