மோடிக்கு பின் பாஜக நிலைக்காது - காங். மூத்த தலைவர் கருத்து


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 18 March 2022 1:51 PM IST (Updated: 18 March 2022 1:51 PM IST)
t-max-icont-min-icon

மோடிக்கு பின் ஏற்படும் அரசியல் குழப்பதால் பாஜக நிலைக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடியது. அந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், சோனியா காந்தி தொடர்ந்து கட்சியை வழிநடத்துவதற்கும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் கட்சியின் முக்கிய முடிகளை எடுப்பதற்கும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜி23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் சோனியா காந்தி கட்சியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்த அதிருப்தி தலைவர்களில் மனீஷ் திவாரி, கபில் சிபில், குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த்ஷர்மா, பூபிந்தர்சிங் ஹூடா, அம்பிகா சோனி, சந்தீப் டிக்சிட், விவேக் தங்கா, ராஜ் பாபர் போன்றோர் முக்கிய நபர்களாவர்.

காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்ற பின்னர் இந்த ஜி23 அதிருப்தி தலைவர்கள் இரு முறை கூடி பேசியுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலக வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கட்சிக்குள் நிலவி வரும் குழப்பம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், நாம் ஆட்சிப்பொறுப்பில் இல்லாததால் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பதற்றமடையக்கூடாது. பாஜக மற்றும் இதர கட்சிகள் கடந்து செல்லும் பயணிகள் போன்றவர்கள். அவர்கள் வருவார்கள் மற்றும் செல்வார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நிலைத்திருக்கும். அடித்தட்டு மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாம் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.

சோனியா காந்தி காங்கிரசை மறுசீரமைக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரை சுற்றியுள்ள நபர்கள் அந்த முயற்சியை நாசப்படுத்த நினைக்கின்றனர். அதிருப்தி தலைவர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து கட்சியை பலவீனப்படுத்துகின்றனர். பாஜக நிரந்தரமான கட்சியாக இருக்கமுடியாது. மோடிக்கு பின் ஏற்படும் அரசியல் குழப்பதால் பாஜக நிலைக்காது’ என்றார்.   

Next Story