பா.ஜனதா சித்தரிக்கும் கட்டுக்கதைகளுக்கு மகாவிகாஸ் அகாடி இளம் எம்.எல்.ஏ-க்கள் பதிலடி கொடுக்க வேண்டும் - சரத்பவார்
பா.ஜனதா சித்தரிக்கும் கட்டுக்கதைகளுக்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்க வேண்டும் என மகாவிகாஸ் அகாடி இளம் எம்.எல்.ஏ.களுக்கு சரத்பவார் அறிவுரை கூறியுள்ளார்.
சரத்பவாருடன் சந்திப்பு
மகாவிகாஸ் அகாடியில் அங்கம் வசிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த இளம் எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி அதீதி தட்காரே, ரோகித் பவார், அதுல் பென்கே, அசுதோஷ்காலே, இந்திரானில் நாயக் மற்றும் காங்கிரசை சேர்ந்த தீரஜ் தேஷ்முக், ருத்துராஜ் பாட்டீல், யோகேஷ் கதம் (சிவசேனா) ஆகியோர் சரத்பவாரை சந்தித்தவர்கள் ஆவர்.
ஆக்ரோஷமான பதிலடி
சந்திப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், " சரத்பவார், அவர் இளம் அரசியல் தலைவராக இருந்த போது ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இருந்த உறவையும், தற்போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் எம்.எல்.ஏ.க்களிடம் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். எதிர்க்கட்சியினர் (பா.ஜனதா) சித்தரிக்கும் தவறான கட்டுக்கதைகளுக்கு சட்டசபையிலும், வெளியேயும் ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் மகாவிகாஸ் அகாடி தனது முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதுதவிர தொகுதியில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்தவும், மக்கள் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து இளம் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை தங்கள் தொகுதி மட்டுமில்லாமல் மாவட்டம், மண்டல அளவிலும் கடுமையாக எதிர்ப்பதாக உறுதி அளித்தனர்" என்றார்.
Related Tags :
Next Story