தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம்
அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு உறுதி
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூருவில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்றும், அந்த பகுதிக்கு அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
முன்னதாக விபத்து நடந்த பலவள்ளி கட்டே பகுதியில் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
துமகூரு மாவட்டம் பாவகடா அருகே தனியார் பஸ் விபத்தில் சிக்கி 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் பலியானவர்கள் மற்றும் பிற தகவல்கள் வர வேண்டிய இருக்கிறது. விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்னை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அதன்படி, விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும். எனது சொந்த செலவில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்குவேன். இதன்மூலம் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் கிடைக்கும். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
பாவகடா அருகே பலவள்ளி கட்டே பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை, தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவது பற்றி எனக்கு தகவல்கள் வந்துள்ளது. அந்த பகுதிக்கு அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
இந்த பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் பற்றியும், அவற்றுக்கு உரிய உரிமம், முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததா? உள்ளிட்டவை குறித்தும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.
Related Tags :
Next Story