ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு - பசவராஜ் பொம்மை உத்தரவு


ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு - பசவராஜ் பொம்மை உத்தரவு
x
தினத்தந்தி 20 March 2022 1:21 PM IST (Updated: 20 March 2022 1:21 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது. கடந்த பிப்ரவரி மாதம், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புராவில் அமைந்துள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை கண்டித்து அந்த முஸ்லிம் மாணவிகள் அதே கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவ-மாணவிகளும் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிப்ரவரி 8-ந் தேதி சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. 

இதனால் பதற்றத்தை தணிக்க கர்நாடக மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதற்கிடையே மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 18 பேர், ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். முதலில் இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், இதில் அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறி, இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு, அதன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி விசாரணை தொடங்கியது. முதல் நாளிேலயே இடைக்கால உத்தரவு பிறப்பித்த அந்த அமர்வு, மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புகளுக்கு வர தடை விதித்தது.

அதைத்தொடர்ந்து 11 நாட்கள் விசாரணை நடைபெற்றது. ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கூடாது என்று கர்நாடக அரசு வாதத்தை எடுத்து வைத்தது. ஹிஜாப் அணிந்து வருவது மத சுதந்திரம் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, மனுதாரர்கள் சார்பில் தேவதத் காமத், ரவிவர்மகுமார் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். 

Next Story