நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றும் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்
வெற்றி பெற்ற பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களோடு அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.
புதுடெல்லி,
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தலுக்குப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி பகவந்த் மானை சட்டமன்ற கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கவர்னரை சந்தித்து மாநிலத்தில் புதிய அரசை அமைக்க அவர் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், பகவந்த் மாைன புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தார்.
பின்னர் கடந்த 17 ஆம் தேதி பகவந்த் மானுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதே நேரத்தில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றும் இதுவரை பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் இன்று இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்ற பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களோடு காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், "4 மாநிலங்களில் வெற்றி பெற்றும் உட்கட்சி மோதல் இருப்பதால் தான் பா.ஜ.க-வால் தற்போது வரை எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பகவந்த் மான் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக வரும் நாட்களில் விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட இருப்பது ஆட்சி அமைத்த 3 நாட்களுக்குள் நீங்கள் செய்த சிறந்த விஷயமாகும்.
பகவந்த் மான் தலைமையில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.பகவந்த் மான் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு இலக்கைக் கொடுப்பார்.
அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்கு உங்கள் சகோதரனாக நான் என்றும் இருப்பேன் " என தெரிவித்தார்.
Related Tags :
Next Story