உக்ரைன் போரால் பக்கத்து நாடுகள் மீது இந்தியா கவனம் - வெளியுறவு மந்திரி தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2022 5:24 AM IST (Updated: 25 March 2022 5:24 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் போரால் பக்கத்து நாடுகள் மீது இந்தியா கவனமாகவும், கண்காணிப்பாகவும் உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் இதில் விதிவிலக்கு கிடையாது.

இந்த விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), ஜோஸ் கே மணி (கேரள காங்கிரஸ் மணி), நரேஷ் குஜ்ரால் மற்றும் நியமன எம்.பி. சுவபன் தாஸ் குப்தா ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவற்றுக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்து கூறியதாவது:-

உக்ரைன் போரைத்தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக எங்கள் கவனத்தில் வருகிறது. அவற்றை நாங்கள் மிகக்கவனமாக கண்காணித்து வருகிறோம்.

ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெருக்கம் வளர்ந்து வருகிறதா என கேட்கப்படுகிறது. ரஷியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் அதை தேசிய கண்ணோட்டத்துடன் கண்காணித்து மதிப்பிடுகிறோம். அந்த முன்னேற்றத்துக்கு ஏற்ப எங்கள் உத்திகள் அமையும்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை முடிவுகள், இந்திய தேசிய நலன்களுக்காக எடுக்கப்படுகின்றன. எங்கள் சிந்தனை, கருத்துகள், ஆர்வங்களால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். எனவே உக்ரைன் நிலைமையை வர்த்தக பிரச்சினைகளுடன் இணைப்பதில் எந்த கேள்வியும் எழவில்லை.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, 6 கொள்கைகளின் அடிப்படையிலானது. அது தெளிவாக இருக்கிறது.

வன்முறை, விரோதப்போக்கை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுக்கொள்கிறது. பேச்சு வார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்புமாறு வலியுறுத்துகிறோம்.

சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம், அனைத்து மாநிலங்களின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மரியாதை ஆகியவற்றில் உலகளாவிய பார்வை தொகுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மோதல் சூழ்நிலையில் மனிதாபிமான அணுகலை நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளின் அதிபர்களுடன் பிரதமர் பேசி உள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், ரஷியாவிடம் இருந்து மேற்கத்திய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு, இந்தியாவுக்கு பாடம் போதிப்பதாக உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கருத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ரஷியாவை கையாள்வதில் சிக்கல்கள் உருவாகி வருவதால், பணம் செலுத்தும் அம்சம் உள்பட பல்வேறு அம்சங்களை அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த விஷயங்களை ஆராய நிதி அமைச்சகத்தின் தலைமையில் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த ஒரு குழு உள்ளது. உண்மையில் ரஷியாவிடம் இருந்து நாம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே எண்ணெய் வாங்குகிறோம். பல நாடுகள் நம்மைக்காட்டிலும் 10-20 மடங்கு இறக்குமதி செய்கின்றன என்று அவர் கூறினார்.

Next Story