மேற்குவங்காளத்தில் 8 பேர் பலியான வன்முறை சம்பவம்; விசாரணையை தொடங்கியது சிபிஐ!


மேற்குவங்காளத்தில் 8 பேர் பலியான வன்முறை சம்பவம்; விசாரணையை தொடங்கியது சிபிஐ!
x
தினத்தந்தி 26 March 2022 12:26 PM IST (Updated: 26 March 2022 12:26 PM IST)
t-max-icont-min-icon

பிர்பூம் வன்முறை வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட மத்திய புலனாய்வுக் குழு டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. நேற்று, பிர்பூம் (ராம்பூர்ஹாட்) வன்முறை வழக்கின் விசாரணைக்காக மேற்கு வங்காள மாநில அரசால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி அமைப்பிடம் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட தாள்களையும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து, பிர்பூம் வன்முறை வழக்கின் விசாரணையை சிபிஐ எடுத்துக் கொண்டது.

இதனை தொடர்ந்து, பிர்பூம் வன்முறை வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட மத்திய புலனாய்வுக் குழு டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதன்படி, டிஐஜி அகிலேஷ் சிங் தலைமையிலான சிபிஐ குழு, ராம்பூர்ஹாட் கிராமத்தை சென்றடைந்தது.மத்திய புலனாய்வு துறையின் தடயவியல் குழுவும் ராம்பூர்ஹாட் கிராமத்தை சென்றடைந்தது. அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story