மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உக்ரைனில் இருந்து திரும்பியவர்களின் கல்வியை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை
உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வியை நிறைவு செய்வதற்கு பல்வேறு கோணங்களில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கனிமொழிக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.
உக்ரைன் போர்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:- உக்ரைன் நாட்டில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களின் நிலைமை மிகக் கடினமாகி வருகிறது. இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்க முடியுமா?
போரினால் உக்ரைன் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த மற்றும் இறந்து போன இந்தியர்களுக்கு மத்திய அரசு என்ன உதவிகள் செய்து உள்ளது?. உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கான விமான கட்டணங்களை இந்திய விமான நிறுவனங்கள் உயர்த்தி இருக்கிறது.
அதனால் விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வருகிறது. இந்த தகவல் அரசுக்கு வந்துள்ளனவா?. இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி பயில என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பரிசீலித்து வருகிறது
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பதில் அளித்து கூறியதாவது:-
22 ஆயிரத்து 500 இந்தியர்கள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பி இருக்கிறார்கள். உக்ரைனில் இருக்கும் நமது தூதரகம் அங்கே தூதரகத்தில் பதிவு செய்துள்ள மீதமிருக்கும் இந்தியர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
இன்னமும் சுமார் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 15 முதல் 20 பேர் இந்தியாவுக்கு திரும்ப விருப்பமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா திரும்புவதற்கு அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மீட்பு திட்டத்தின்படி 90 விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 76 விமானங்கள் தனியார் போக்குவரத்து விமானங்கள். 14 விமானங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் ஆகும். இவற்றுக்கான செலவை இந்திய அரசாங்கம் செலுத்தி வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வியை நிறைவு செய்வதற்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சகங்கள் பல்வேறு கோணங்களில் பரிசீலித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story