நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது- தலைமை தேர்தல் கமிஷனர்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 27 March 2022 4:27 AM IST (Updated: 27 March 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா வருத்தம் வெளியிட்டார்.

நாடாளுமன்றவாதிகளுக்கு விருது

தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளை தேர்வுசெய்து பிரைம் பாயிண்ட் பவுண்டேசன் ஆண்டுதோறும் ‘சன்சாத் ரத்னா’ விருது வழங்குகிறது. இந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, புரட்சிகர சோஷலிஸ்டு தலைவர் என்.கே.பிரேமசந்திரன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்த விருதுக்கு தேர்வு பெற்றிருந்தனர்.

டெல்லியில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் விருதுகளை வழங்கி தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் மக்களவையில் 15 பெண் எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய 17-வது மக்களவையில் 78 எம்.பி.க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் இதில் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.

பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவு

நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் விரும்பியதை விட குறைவாகவே உள்ளது. நாடாளுமன்றம் பெண்களை இன்னும் அதிகளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு சட்டம் உறுதி அளிக்கிறது. இதில் அடித்தட்டு பெண்கள் தங்கள் தலைமைப்பண்புகளை நேர்த்தியாக வெளிக்காட்டி, தங்கள் சமூகங்களில் பார்க்கக்கூடிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர். மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு தொடர்பைப் பேண வேண்டியது அவசியம்.

நாடாளுமன்ற நேர இழப்பு

நாடாளுமன்றத்தில் சூடான வாதங்கள், விவாதங்கள், உரைகள் ஒரு பலம்வாய்ந்த நாடாளுமன்றத்தின் அழகு ஆகும். அடிக்கடி இடையூறுகள் ஏற்படுத்துவதும், வெளிநடப்புகள் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதுவும் அல்ல.

நாடாளுமன்றத்தில் ஏற்படுகிற இடையூறுகள் காரணமாக நேரத்தை இழக்க நேரிடுவது கவலை அளிக்கிறது. சில அமர்வுகள் நடைபெறாமலே போய் விடுகின்றன. வலுவான ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல.

நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வது, கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரத்தில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவது என்பது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள். இந்த பொன்னான வாய்ப்பை நாடகமாடியும், கோஷங்களை எழுப்பியும், சபையின் மையப்பகுதிக்கு விரைந்தும் வீணடிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ெபண்கள் வாக்களிப்பு அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தபோதும் பெண்கள் வாக்களிப்பு சதவீதம் அதிகரித்துவருவதாக குறிப்பிட்ட தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநில தேர்தலில் வாக்கு அளித்ததில் ஆண் வாக்காளர்களை பெண் வாக்காளர்கள் விஞ்சி விட்டனர் என குறிப்பிட்டார். பஞ்சாப்பில் இரு பாலினரும் கிட்டத்தட்ட சம அளவில் வாக்கு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story