கர்நாடகாவில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதியில்லை


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 27 March 2022 8:51 PM IST (Updated: 27 March 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் ஹிஜாப் அணிந்து வருவர்களுக்கு அனுமதியில்லை என்று அம்மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கர்நாடகாவில் நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 8.76 லட்சம் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத ஏதுவாக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.   

இந்நிலையில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி நாகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய நாங்கள் அனுமதிக்கவில்லை. மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளி வளாகத்திற்கு வரலாம். 

ஆனால் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்பது போன்றே தேர்வு எழுதும்போதும் ஹிஜாப் அணிய அனுமதியில்லை’என்றார்.    

இதற்கிடையில், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நடைபெற்ற இறுதி செய்முறை பயிற்சி தேர்வுகளில் சில இஸ்லாமிய மத மாணவிகள் பங்கேற்கவில்லை. இறுதி செய்முறை பயிற்சி தேர்வு எழுதாத மாணவ-மாணைவிகளுக்கு மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என பள்ளிகல்வித்துறை மந்திரி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story