கர்நாடகா; எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்! ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை


கர்நாடகா; எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்! ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை
x
தினத்தந்தி 28 March 2022 8:14 AM IST (Updated: 28 March 2022 8:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 3,444 மையங்களில் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், “தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பயம் இன்றி தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் எந்த விதமான பயமும் இன்றி தேர்வு எழுத வேண்டும். 

மொத்த பாடத்திட்டத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 80 சதவீத பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த முறை கேள்விகள் அதிகமாக கேட்கப்படும். 

இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு நன்றாக தெரிந்த விடைகளுக்கான கேள்வுகளை தேர்ந்தெடுத்து எழுத முடியும். அதனால் மாணவர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை.

ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது

கர்நாடக கல்வி சட்டத்தின்படி ஹிஜாப் அணிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதனால் இன்று நடைபெறும் தேர்வில் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மத உணர்வுகளை அடையாளப்படுத்தும் எந்த விதமான ஆடைகளையும் அணிந்து வரக்கூடாது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படும்.

பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம். ஆனால் வகுப்பில் ஆஜராகும்போது, ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நல்ல முறையில் எந்த பிரச்சினையும் இன்றி தேர்வு நடைபெறும். மாணவர்கள் மகிழ்ச்சியாக தேர்வு எழுத வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.”

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Next Story