300 யூனிட் இலவச மின்சாரம்: ஆம் ஆத்மி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ந்தேதி பதவியேற்று கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு இன்று அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் பஞ்சாப் அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர், பிற அரசியல் கட்சிகளைப் போல ஆம் ஆத்மி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பகவந்த் மானின் இந்த அற்புதமான முடிவிற்கு வாழ்த்துக்கள். முதல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம். நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். பிற கட்சிகளைப் போல பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை.
இப்போது தெளிவான நோக்கத்துடன் நேர்மையான, தேசபக்தியுள்ள அரசாங்கம் வந்துள்ளது. ஊழலை ஒழித்து பணத்தை சேமிப்போம். பஞ்சாபின் முன்னேற்றத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட விடமாட்டோம்" என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசு டெல்லியில் மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story