கொரோனாவுக்கு பிந்தைய நீண்ட கால பாதிப்புகள் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்


கொரோனாவுக்கு பிந்தைய நீண்ட கால பாதிப்புகள் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 17 April 2022 1:36 AM IST (Updated: 17 April 2022 6:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு பிந்தைய நீண்ட கால பாதிப்புகள் என்ன? அவற்றுக்கான சிகிச்சை என்ன? என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நீண்ட கால பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால், கொரோனா பாதித்து சிகிச்சைக்கு பின்னர், அதில் இருந்து மீண்ட பின்னரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நீண்ட காலம் ஆளாக நேருகிறது.

நாட்டில் தற்போது கொரோனா பரவல் தட்டையாக இருந்தபோதும், நீண்டகால கொரோனா பாதிப்பின் அறிகுறிகளை கொண்ட பலரை காண முடிகிறது என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நீண்ட கால கொரோனா நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், உலக சுகாதார அமைப்பு தற்போதைய ஆதாரங்கள் தோராயமாக 10 முதல் 20 சதவீத மக்கள் ஆரம்ப நோய்த்தொற்றில் இருந்து மீண்ட பிறகு, பல்வேறு நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகளை அனுபவிக்கின்றனர் என கூறுகிறது. இவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை அனுபவிக்கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

நுரையீரல் சேதம்

டாக்டர் ராகேஷ் பண்டிட், உள் மருத்துவ நிபுணர் கூறியதாவது:- 25 முதல் 50 வயது வரையிலானோர் நீண்ட கால பாதிப்புகளை சந்திக்கின்றனர். கொரோனா பாதித்து, வென்டிலேட்டரின்கீழ் இருந்தவர்கள் நுரையீரல்கள் சேதம் அடைவதைப் பார்க்க முடிகிறது. மேலும் நரம்பியல் அமைப்புகள், சிறுநீரகங்கள், இரைப்பை, குடல் மற்றும் நரம்புத்தசை, தசைக்கூட்டு அமைப்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர். கண் பிரச்சினைகளால் அவதிப்படுகிற சிலரையும் பார்க்க முடிகிறது.

இதயத்துடிப்பு அதிகரிப்பு

டாக்டர் விகாஸ் மவுரியா (நுரையீரல் மருத்துவ நிபுணர்) கூறியதாவது:- நோயாளிகளிடம் நீண்ட கால கொரோனா பாதிப்பு அறிகுறிகளாக இதயத்துடிப்பு அதிகரிப்பு, வாசனை, சுவை இழப்பு, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் காய்ச்சல், அவை நிற்கிறபோது தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் நேருகின்றன. இணைநோய்கள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் கடுமையாக உள்ளன.

சிகிச்சைகள் என்ன?

டாக்டர் சுச்சின் பஜாஜ் (உஜாலா சிக்னஸ் குழும நிறுவன இயக்குனர்):-

நீண்ட கால கொரோனாவுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை. வலி நிவாரணிகளும், வைட்டமின் சத்து மாத்திரைகளும், மறுவாழ்வு தெரபியும், யோகா, பிசியோதெரபி சிகிச்சையும் நாங்கள் முயற்சிக்கும் சிகிச்சைகள் ஆகும். இந்த சிகிச்சைகள் வெற்றி தந்துள்ளன.

டாக்டர் சுசிலா கட்டாரியா, உள்மருத்துவ நிபுணர் கூரியதாவது:-

நீண்டகால கொரோனாவை சமாளிக்க ஒரே வழி, வேகமாக மற்றும் வழக்கமான உடற்பயிற்சி, சத்தான உணவுகள், மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகள்தான்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story