நாளை முதல் 22-ந்தேதி வரை சுகாதார நல வாழ்வு மையங்களில் சுகாதார ‘மேளா’


நாளை முதல் 22-ந்தேதி வரை சுகாதார நல வாழ்வு மையங்களில் சுகாதார ‘மேளா’
x
தினத்தந்தி 17 April 2022 2:32 AM IST (Updated: 17 April 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் 22-ந்தேதி வரை ஆயுஷ்மான் பாரத்- சுகாதார நல வாழ்வு மையங்களில் நடக்க உள்ள சுகாதார ‘மேளா’க்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார நல வாழ்வு மையங்கள்

ஆயுஷ்மான் பாரத்- சுகாதார நல வாழ்வு மையங்களின் 4-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி காணொலிக்காட்சி வழியாக நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 400 ஆயுஷ்மான் பாரத்- சுகாதார நல வாழ்வு மையங்கள் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் இந்த எண்ணிக்கையை 1.5 லட்சமாக உயர்த்த உறுதி பூண்டுள்ளோம்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார நல வாழ்வு மையங்கள், இ-சஞ்சீவினி தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல மாநிலங்களில் மக்கள் இ-சஞ்சவீனி பலன்களை விரைவாக அடையாளம் கண்டிருக்கிறார்கள். மேலும், இது சுகாதார சேவைகளை தேடும் டிஜிட்டல் முறையை பரவலான விரைவான தத்தெடுக்கும் போக்குக்கு வழி வகுத்துள்ளது.

புற்றுநோய் பரிசோதனை

சில சுகாதார நல வாழ்வு மையங்கள் வாய், மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை வசதிகளை வழங்குகின்றன. இது நோயை விரைந்து கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.

தொலைவிடங்களில் உள்ள மக்களுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவைகள் மிகவும் முக்கியமாகும். அனைவருக்கும் சுகாதார சேவைகளை அணுக உதவியாகவும் இருக்கும்.

சுகாதார ‘மேளா’க்கள்

18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிற ஆயுஷ்மான் பாரத்- சுகாதார நலவாழ்வு மையங்களின் சுகாதார மேளாக்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமாக முன்கூட்டியே மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்த வேண்டும்.

இந்த சுகாதார மேளாவின்போது, காச நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நீரிழிவு, வாய்புற்றுநோய் பரிசோதனைகளை மாநிலங்கள் விரிவாக நடத்த வேண்டும்.

சுகாதார துறையில் இந்தியா, அடையாள தீர்வில் இருந்து முழுமையான தீர்வுக்கு நகர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story