பீகார் இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான அடி கொடுத்துள்ளனர்; எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்


பீகார் இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான அடி கொடுத்துள்ளனர்; எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்
x
தினத்தந்தி 17 April 2022 8:34 PM IST (Updated: 17 April 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

இந்த தேர்தல் வெற்றியின் மூலம், தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 76 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவை விட ஒரு இடம் மட்டுமே பின்தங்கியுள்ளது.

பாட்னா,

பீகாரில் பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக உள்ளார். 

பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்து வந்த விஐபி கட்சியின் தலைவர் சஹானி, உ.பி.யில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தாக்கி பேசியதால், பாஜகவின் எதிர்ப்பை சம்பாதித்தார். 

இதனையடுத்து அவரது மந்திரி பதவியை பறித்து அக்கட்சியை பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க நீக்கியது. மேலும்,ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த விஐபி கட்சியின் 3 எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைத்து கொண்டது.

இதனால் தேர்தல் களம் மும்முனை போட்டியானது.

ஏப்ரல் 12ம் தேதி அன்று நடைபெற்ற போச்சாஹான் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில், அந்தந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பீகாரில் மட்டுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போச்சாஹான் இடைத்தேர்தலில், ஆர்ஜேடியின் அமர் பாஸ்வான் 48.52 சதவீத வாக்குகளையும் (82,562), விஐபியின் கீதா குமாரி 17.21 சதவீத வாக்குகளையும் பெற்றனர். பாஜக வேட்பாளர் பேபி குமாரி 26.98 சதவீத வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம், தற்போது பீகார் சட்டசபையில் 77 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம், ஆர்ஜேடி 76 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவை விட ஒரு இடம் மட்டுமே பின்தங்கியுள்ளது.

தேர்தல் வெற்றி குறித்து ஆர்ஜேடி (ராஷ்திரிய ஜனதா தள) கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்;-
“இந்த மகத்தான வெற்றிக்காக போச்சாஹான் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பீகார் மக்களைப் பற்றி அரசாங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் கவலைப்படவில்லை.

இது போசாஹானில் எந்தக் கட்சிக்கும் இதுவரை கிடைக்காத மிகப்பெரிய வெற்றியாகும். அரசை தடியால் அடிக்கும் வேலையை மக்கள் செய்துள்ளனர்” என்றார்.

Next Story