வட மாநிலங்களில் தொடரும் வன்முறை; ஹரித்வாரில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு - 4 பேர் காயம்!


வட மாநிலங்களில் தொடரும் வன்முறை; ஹரித்வாரில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு - 4 பேர் காயம்!
x
தினத்தந்தி 17 April 2022 9:10 PM IST (Updated: 17 April 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியை தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன.இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறின. 

இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே உள்ள பக்வான்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்றபோது கற்கள் வீசப்பட்டன. 

நேற்று மாலை, தாதா ஜலால்பூர் கிராமத்தின் வழியாக ஊர்வலம் சென்றபோது வீடுகளின் கூரைகளில் இருந்து, ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. ஊர்வலத்தில் இருந்தவர்கள் மறைந்து கொள்ள இடம் தேடி ஓடத் தொடங்கியதால், நெரிசல் ஏற்பட்டது.

இந்த கல் வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏராளமான போலீசார் மற்றும் பிஏசி பணியாளர்கள் குவிக்கப்பட்டதால் அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அக்கம் பக்கத்திலுள்ள கிராமவாசிகள் அங்கு குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 

எனினும், போலீசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. அதில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story