உலக வங்கியின் உயர் நிலை கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!
மந்திரி நிர்மலா சீதாராமன், அரசுமுறைப் பயணமாக இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அரசுமுறைப் பயணமாக இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது, பன்னாட்டு நிதியத்தின் (ஐ எம் எப்) ஆலோசனை கூட்டம், உலக வங்கியின் உயர் நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எப் எம் சி பி ஜி) கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
மேலும், இந்தோனேசியா, தென் கொரியா, இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்பார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது, உலக வங்கியின் உயர் நிலை கூட்டத்தில் அதன் தலைவர், டேவிட் மல்பாஸையும் அவர் சந்தித்து பேசுகிறார். பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரால் நடத்தப்படும் "ஒரு குறுக்கு வழியில் பணம்" என்ற உயர்நிலைக் குழு விவாதத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
தொடர்ந்து, எரிசக்தி, குறைகடத்தி உட்பட பல்வேறு துறைகளில் இந்திய அரசுக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார். மேலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடுகிறார்.
இந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story