டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறை: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அமித் ஷா உத்தரவு
டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 8 போலீசார் மற்றும் பொதுமக்கள் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வன்முறை தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுசம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா, சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story