அனுமன் ஜெயந்தியையொட்டி இரு பிரிவினர் மோதல்: மராட்டியத்தில் திடீர் வன்முறை - ஊரடங்கு அமல்
அனுமன் ஜெயந்தியையொட்டி மராட்டியத்தில் உள்ள அச்சல்பூரில் இரு பிரிவினர் கல்வீசி மோதிக்கொண்டனர்.
மும்பை,
அனுமன் ஜெயந்தியையொட்டி மராட்டியத்தில் உள்ள அச்சல்பூரில் இரு பிரிவினர் கல்வீசி மோதிக்கொண்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை ஒடுக்கினர். அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் அச்சல்பூர் நகரின் நுழைவு வாயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி காவி கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இந்த கொடியை நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் அகற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நள்ளிரவில் இரு பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
உடனே உள்ளூர் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றனர். ஆனால் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் வன்முறை மூண்டது.
சம்பவ இடத்துக்கு மாநில ரிசர்வ் படை போலீசார் விரைந்து வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மீண்டும் வன்முறை ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அச்சல்பூர் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிகாந்த் சதவ் கூறினார். இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் அங்கு கல்வீச்சு, தீ வைப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story