அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரிய வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கோரி தொழிலதிபர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி,
பண மதிப்பிழப்பு சமயத்தில், தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் சேகர் ரெட்டி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி வினீத் சரண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த நவம்பர் 26-ந் தேதி நடந்த விசாரணையின்போது, மேல்முறையீடு மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதுடன், சேகர் ரெட்டிக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விசாரணையின்போது, சேகர் ரெட்டியின் சார்பில் ஆஜரான வக்கீல் விக்ரம் சவுத்திரி, ‘வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் மனுதாரருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் இரு தரப்பு சார்பிலும், வாதங்கள் அடங்கிய குறிப்பை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story