மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் - தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் நினைப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்து இருந்த சுயேச்சை எம்.பி. நவ்னீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ.வை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களை சந்திக்க பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா சென்றார்.
போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பிய போது சிலர் அவரது காரில் தண்ணீர் பாட்டில் செருப்பு ஆகியவற்றை எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கிரித் சோமையாவின் கார் பக்க கண்ணாடி உடைந்து, அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சம்பவம் குறித்து மத்திய உள்துறையிடம் புகார் அளிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள கிரித் சோமையா தாக்கப்பட்ட விவகாரத்தை மத்திய உள்துறை செயலாளரிடம் எடுத்து செல்வோம். ஒன்று இந்த தாக்குதலுக்கு போலீசார் மறைமுகமாக உதவி செய்து இருக்க வேண்டும். அல்லது அதை தடுக்க திறன் இல்லாமல் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் மராட்டிய மக்கள் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் எந்த சூழலிலும் போராடுவோம் என்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜனதா கோரிக்கை வைக்காது. மேலும் அதுகுறித்து கவர்னர் தான் முடிவு செய்ய முடியும். அதுபோல இதுபோன்ற தாக்குதலுக்கு பா.ஜனதா பயப்படாது. இதற்கு பதில் அடிகொடுக்கும் திறன் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story