இமாசல பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமா? முதல்-மந்திரி ஜெய்ராம் தாகுர் பதில்


இமாசல பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமா? முதல்-மந்திரி ஜெய்ராம் தாகுர் பதில்
x
தினத்தந்தி 25 April 2022 2:02 PM IST (Updated: 25 April 2022 2:02 PM IST)
t-max-icont-min-icon

பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும், படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சமான பொது சிவில் சட்ட அமலாக்கம் நடைமுறைபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முடிந்த உத்தராகண்ட் சட்டசபை தேர்தலின் போது, அங்கு பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். 

இதனையடுத்து, அங்கு பாஜகவின் வெற்றிக்கு பிறகு தாமியே மீண்டும் முதல்வரான நிலையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

அதே போல, உத்தராகண்ட் மாநிலத்தை தொடர்ந்து பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும், படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா, சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாஜக ஆளும் இமாசலபிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என அம்மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகுர் கூறினார்.

டெல்லியில் பேட்டியளித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, “இமாச்சல பிரதேசம் அமைதியான மாநிலம். ஆம் ஆத்மியின் அரசியல் பாணி அங்கு வேலை செய்யாது. மூன்றாவது மாற்று எதையும் அரசு ஏற்காது.

பொது சிவில் சட்டம் ஒரு நல்ல நடவடிக்கை. இது மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்.”

இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பாஜக ஆளும் முக்கிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று கூறும்போது, “தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றிக்குப் பிறகு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார். இந்த சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டிய தருணம் வந்துள்ளது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்ஸிகளுக்கு அவர்களது தனிச்சட்டம் கடைபிடிக்க அனுமதி உள்ளது. இந்துக்கள், சீக்கியர் மற்றும் ஜெயின்களுக்கு  ‘இந்து சிவில் சட்டம்’ நடைமுறையில் உள்ளது.

இந்த இரண்டுக்கும் பொதுவாக,  ‘பொது சிவில் சட்டம்’ அமலாக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனாலும் எந்த மாநில அரசும் அதனை அமல்படுத்த முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story