ஹிஜாப் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு புதிய தகவல்
ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 2 நாட்களுக்குள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது.
இதனால், முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடன.
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் மீனாக்ஷி அரோரா முறையிட்டார்.
இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி 2 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story