காஷ்மீர்: வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் மிட்ரிகம் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதனால் சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பிற்கும் பல மணி நேரம் நீடித்து வரும் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளான அஜஸ் ஹபீஸ் மற்றும் ஷாகித் அயப் இருவரும் அல் பெடர் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த இரு பயங்கரவாதிகளும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் புல்வாமாவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என காஷ்மீர் ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் 2 முதல் 3 பயங்கரவாதிகள் பதுங்இ இருப்பதாகவும் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story