மராட்டிய நிறுவன நாள்: சகோதரத்துவ சீர்குலைப்பு முயற்சியை மக்கள் முறியடிப்பார்கள்- உத்தவ் தாக்கரே


மராட்டிய நிறுவன நாள்: சகோதரத்துவ சீர்குலைப்பு முயற்சியை மக்கள் முறியடிப்பார்கள்- உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 1 May 2022 3:10 AM IST (Updated: 1 May 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நடைபெறும் சகோதரத்துவ சீர்குலைப்பு முயற்சியை மக்கள் முறியடிப்பார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதிப்பட தெரிவித்தார்.

இன்று மராட்டிய தினம்

மராட்டியம் தனி மாநிலமாக 1960-ம் ஆண்டு மே 1-ந் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் மராட்டிய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது.

மராட்டிய தினத்தையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மராட்டிய தினத்தில் மாநில மக்களுக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மராட்டியம் மத நல்லிணக்கம், கட்டுப்பாடு மற்றும் மனசாட்சிக்கு பெயர் பெற்றது. நமது மாநில மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், இதை மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள்.

தியாகங்கள்

மராட்டியத்தின் பெருமையை புண்படுத்தவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அவதூறு செய்யவும் யாராவது சதி செய்தால் மாநில மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவர்கள்.

மராட்டியம் எத்தனை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முன்னேறும். மேலும் `சம்யுக்தா (ஒன்றுபட்ட) மராட்டியம்' என்பதற்காக தங்கள் ரத்தத்தை சிந்தியவர்களின் தியாகங்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலம் எதிர்கொண்ட தொற்றுநோய் மற்றும் பிற இயற்கை பேரிடர்களின் போது தைரியத்துடன் கடமையை ஆற்றியதற்காக அரசு நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நமது மாநிலத்தின் அடையாளமாக விளங்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே, சத்ரபதி சாகு மகாராஜ் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த நன்நாளில் நினைவுகூருகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக இன்று மராட்டியத்தில் சாதிகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி நடப்பதன் மூலம், இந்த பெரிய தலைவர்களின் சமூகப் புரட்சியின் சித்தாந்தம் புறக்கணிக்கப்படுகிறது. மாநிலத்தின் பெயர் நாட்டிலும், உலகிலும் பிரகாசிக்க எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


Next Story