நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ‘ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மனிதர்களுக்கு சேவை செய்யவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட நம்மை நாமே மறுஅர்ப்பணம் செய்து கொள்ள உறுதி ஏற்போம்’ என்று கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், ‘உண்மையான தொண்டு, கடவுளுக்கு நன்றி கூறுதல் ஆகியவற்றை கொண்டாடுவதுதான் ரமலான் பண்டிகை. இந்த பண்டிகை, தாராள மனநிலையையும், மக்களை ஒருவரை ஒருவருடன் பிணைத்து, நட்புறவு, சகோதர உறவையும் வலுப்படுத்த பயன்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்து செய்தியில், ‘இனிய ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story