இந்தியாவிற்குள் பல பாகிஸ்தான்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது - மெகபூபா முப்தி


இந்தியாவிற்குள் பல பாகிஸ்தான்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது - மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 3 May 2022 9:00 PM IST (Updated: 3 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

அவர்கள் (பா.ஜ.க) சிறுபான்மையினரின் வீடுகளை மட்டும் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கவில்லை. இந்த நாட்டின் மதச்சார்பற்ற கலாசாரத்தையும் தான்.

ஸ்ரீநகர்,

டெல்லியின் ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட சில இடங்களில், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக அரசு புல்டோசர் கொண்டு பொதுமக்களின் வாழ்விடங்களை தகர்த்த சம்பவங்கள் கடும் சர்ச்சையை கிளப்பின.

இந்த விவகாரத்தில், “இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பயங்கரவாத சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது” என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று பேட்டியளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது, “அவர்கள் (பா.ஜ.க) சிறுபான்மையினரின் வீடுகளை மட்டும் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கவில்லை. இந்த நாட்டின் மதச்சார்பற்ற கலாசாரத்தையும் தான். 

வேலைவாய்ப்பாக இருக்கட்டும், பணவீக்கமாக இருக்கட்டும், எல்லா துறைகளிலும் அவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். 

இப்போது இந்து-முஸ்லிம் பிரிவினையை மட்டுமே அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நாட்டைப் பற்றிய தொலைநோக்கு பார்வை இருப்பதாக தெரியவில்லை. 

மேலும், அவர்களின் (பா.ஜ.க) தேசியவாத கொள்கைக்கு இணங்காத மக்களை, பாகிஸ்தானுக்கு செல்லுமாறு அவர்கள் கூறுகையில், இந்த அரசு இந்தியாவுக்குள் பல மினி பாகிஸ்தான்களை உருவாக்குகிறது" எனக் கூறினார்.

Next Story