ஒரு பிராமணரை இந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் - மத்திய மந்திரியின் பேச்சால் சர்ச்சை!
உள்ளாட்சி அமைப்புகளில் பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மும்பை,
மராட்டிய மாநில முதல் மந்திரியாக பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை பார்க்க விரும்புவதாக மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
நேற்று முன்தினம், செவ்வாய்கிழமை அன்று இரவு ஜல்னாவில் பரசுராமர் ஜெயந்தியையொட்டி பிராமண சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் பேசும்போது, அவர் இவ்வாறு கூறினார்.
அந்த பேரணியில் கலந்து கொண்ட விருந்தினர் ஒருவர் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மந்திரி ராவ்சாகேப் தன்வே பதில் அளித்து பேசியதாவது, “நான் பிராமணர்களை கார்ப்பரேட் தலைவர்களாகவோ அல்லது குடிமைப் பணி தலைவர்களாகவோ பார்க்க விரும்பவில்லை, ஒரு பிராமணரை இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாகப் பார்க்க விரும்புகிறேன்.
அரசியலில் சாதிவெறி அதிகம் வந்துவிட்டது, அதை புறக்கணிக்க முடியாது. ஆனால் சமூகங்களை ஒன்றாக வைத்திருக்கக்கூடிய ஒரு தலைவர் இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை பேச்சு குறித்து மராட்டிய மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார் இன்று கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “யார் வேண்டுமானாலும் முதல் மந்திரி ஆகலாம். மூன்றாம் பாலினத்தவரோ அல்லது எந்த மதத்தை சார்ந்தவரும் அல்லது எந்த சாதியை சேர்ந்த தனி நபரோ அல்லது எந்த ஒரு பெண்ணோ வேண்டுமானாலும் முதல் மந்திரி ஆகலாம்.
அந்த நபருக்கு சட்டசபையில் 145 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால், அவர் முதல் மந்திரியாகலாம்” என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story